பக்கங்கள்

02 ஜூலை 2011

மனநோயாளிகளுடன் அடைத்து துன்புறுத்தல்!

சிறையில் மனநோயாளிகளுடன் தங்களை தங்க வைத்து இலங்கை பொலிஸார் அவமானப்படுத்தியதாக விடுதலையான இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 23 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 5 படகுகளுடன் 23 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்களை வவுனியா, அநுராதபுரம் சிறைகளில் அடைத்து வைத்தனர். மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும் மன்னார் நீதிமன்றம் ஜூன் 29 ஆம் திகதி விடுதலை செய்தது.
பின்னர் 23 மீனவர்களையும் 5 படகையும் இலங்கைக் கடற்படையினர் அழைத்து வந்து சர்வதேச கடலில் காத்திருந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான சி.146 என்ற ரோந்துக் கப்பல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மீனவர்கள் 23 பேரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை இராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலர் ஆனிமுத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா, மண்டபம் பேரூராட்சித் தலைவர் தங்கமரைக்காயர் ஆகியோர் வரவேற்றனர். மண்டபம் கடலோரக் காவல் படை நிலையப் பொறுப்பதிகாரி மூரே, இராமேஸ்வரம் தாசில்தார் கணேசன், இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்புப் பிரதிநிதி யூ.அருளானந்தம் ஆகியோர் வரவேற்றனர்.
விடுதலையான மீனவர் விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ஜூன் 21 ஆம் திகதி மன்னார் பொலிஸார் எங்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்குப் பதிந்தனர். பின்னர் வவுனியா சிறைக்குக் கொண்டு செல்வதற்குப் போர்க்குற்றவாளி போல் நீண்ட இரும்புச் சங்கிலியில் எங்களது கைகளைப் பிணைத்து வரிசையாக வரும்படி கூறி அழைத்துச் சென்றனர்.
வவுனியா சிறையில் 2 நாள் அடைத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்துச் சென்று அநுராதபுரம் சிறையில் 6 நாள் அடைத்து வைத்தனர். அங்கு எங்களுடன் மனநலம் பாதித்த நோயாளிகள் சிலரையும் அடைத்தனர். சில சமயம் மனநோயாளிகள் திடீரென அலறிக் கொண்டு சத்தம் போடுவார்கள். அப்போது இரவில் தூங்க முடியாமல் நாங்கள் பரிதவித்தோம்.
மேலும் மனநோயாளிகளால் அந்த அறை முழுவதும் மலம், சிறுநீர், துர்நாற்றம் வீசியது. மனநோயாளிகளுடன் எங்களை அடைத்து வைத்து இலங்கை பொலிஸார் எங்களை அவமானப்படுத்தினர். அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்ட 6 நாட்களில் மனதளவில் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.