பக்கங்கள்

15 ஜூலை 2011

தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள முரளிதரனின் கருத்து!

தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது தென் ஆப்பிரிக்கா.அதேபோல ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அதேபோன்ற ஒரு நிலை நெருங்கி வரத் தொடங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினர், ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடத்திய அகோர கொடூர கொலை வெறியாட்டக் காட்சிகள் அடங்கிய இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோவைப் பார்த்து உலக அளவில் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த கொடூர இனவெறி காட்சிகளால் இப்போது இலங்கையின் கி்ரிக்கெட் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கூட இலங்கைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்த யோசனைக்கு வர முக்கியக்காரணம், சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் கிராபிக் வடிவிலான டாக்குமென்டரியான போர் கார்னர்ஸ் ஒரு காரணம். இதில், இலங்கை இனப்போரின்போது ராணுவம் நடத்திய கொடூரங்களை அதில் சித்தரித்துள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டு வெளியான அந்தக் கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆகஸ்ட்6ம் தேதி தொடங்கவுள்ள தொடரில் ஐந்து ஒரு நாள் போட்டி, 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும், இலங்கையுடனான கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாமல் இலங்கை அரசும் கூட அச்சமடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் கிரிக்கெட்டைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் அது நாளை உலக அளவிலான பொருளாதாரத் தடைகளுக்குக் கொண்டு போய் விடக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது.
இந்த நிலையில், முரளிதரன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புறக்கணிப்பு முடிவு குறித்து முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதேசமயம், ஒரு நாட்டுடனான கிரிக்கெட் உறவைத்
துண்டிப்பது, புறக்கணிப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.அதனால் பல கடுமையான விளைவுகளை அந்த விளையாட்டு சந்திக்க நேரிடும்.
அரசியல் வேறு, விளையாட்டு வேறு. இன்று இலங்கை, நேற்று பாகிஸ்தான், ஜிம்பாப்வே என்று ஆஸ்திரேலியா அணி தனது புறக்கணிப்பை தொடருமானால், நாளை அது சில நாடுகளுடன் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் கிரிக்கெட் செத்துப் போகும். ஐபிஎல் போட்டிகள் தலை தூக்கி முன்னணி இடத்தைப் பிடிக்கும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றார் முரளிதரன்.
முரளிதரனின் இந்தப் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முரளிதரனின் பேச்சு ஈழத் தமிழர்களை, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் ஒவ்வொரு முறையும் சாதனை படைத்தபோது தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிய தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் கூறுகையில், முரளிதரின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கையின் கொலைக்களம் வீடியோவை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்க்க வேண்டும். அதைப் பார்த்து விட்டு அவர்கள் முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.
சிலர் சொல்லலாம், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று.ஆனால் தென் ஆப்பிரிக்க விஷயத்திலும், ஜிம்பாப்வே விஷயத்திலும் இப்படி யாரும் பேசவில்லையே, இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும்?
இலங்கைக்குப் போகாதீர்கள் என்று ஆஸ்திரேலிய அரசு சொல்லப் போவதில்லை. அது வேறு விஷயம்.ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கென்று முடிவெடுக்க உரிமை உள்ளது. அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து அதை அவர்கள் ஆஸ்திரேலிய அரசுக்குச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
முன்பு இலங்கை என்பது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டுமே இருந்தது. இப்போது அப்படி இல்லை. இன்று அது மனித உரிமைகள் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, இலங்கை பயணம் குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.