மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.
இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது,
என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களைக் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரியவந்தது.
நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம்.
உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம்.
கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி. இவ்வாறு மனோ கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.