பக்கங்கள்

28 ஜூலை 2011

அல்வாயில் கோஷ்டி மோதல் தடுக்கப்பட்டது.

வடமராட்சி அல்வாய் பகுதியில் இளைஞர் கோஷ்டிகளுக்கு இடையே மூள இருந்த மோதலை தவிர்த்திருந்த பொலிஸார் அது தொடர்பாக மேலும் 13 பேரை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்வாய் வைரவர் கோயிலுக்கருகில் இரு தரப்பு இளைஞரிடையே முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு விரைந்த நெல்லியடிப் பொலிஸார் வாள், கத்திகளுடன் 38 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் 36 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோஷ்டிகளுடன் தொடர்புடைய வேறு சிலர் துன்னாலைப் பகுதியில் பதுங்கியிருப்பது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு துன்னாலைப் பகுதியில் குறிப்பிட்ட பகுதியை நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.
அங்கு பதுங்கியிருந்த 14 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.இவர்கள் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் 13 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.