மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பதிவு நடவடிக்கையின்போது முறையான விதிமுறைகளைப் பின்பற்றும்படியே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு நடவடிக்கையை முற்றாக இடைநிறுத்துமாறு உத்தரவிடவில்லை.
யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எந்தவித சூழ்ச்சியும் இல்லை.இவ்வாறு யாழ். மாவட்ட படைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்
கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று யாழ். குடாநாட்டில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், புகைப்படமும் எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் மனக் கிலேசம் ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் எதற்கென்று ஒரு சாராரும், இதனை ஏன் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர் என்று மற்றைய தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.இது தொடர்பாக யாழ்.மாவட்ட படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளதாவது.
யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது எமது கடமையாகும். அது மட்டுமின்றி, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, இங்கு பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டியுள்ளது.
யாழ். குடாநாட்டில் இடம் பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது மக்களின் நலனுக்காகவே. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் பதிவு நடவடிக்கையை முற்றாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதை முறையான விதிமுறைகளைப் பின்பற்றி செய்யும்படியே உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதேவேளை, கோப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் நேற்றும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று மக்களைப் பதிவுசெய்துள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இராணுவத்தினர் குழுக்களாக வீடுகளுக்குச் சென்று மக்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின்போது உங்களில் யாராவது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்துள்ளீர்களா? என்றும், நீங்கள் இடம் பெயர்ந்தவர்களா? எனவும், உங்கள் குடும்பத்தில் எவராவது இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? எனவும் பொதுமக்களிடம் இராணுவத்தினர் வினவுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இராணுவப் பதிவு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தும், ஏன் மீண்டும் புகைப்படம் எடுத்து பதிவு செய்கிறீர்கள்? என்று இராணுவத்தினரிடம் பொதுமக்களில் யாராவது வினவினால், இராணுவத்தினர் கடுந்தொனியில் அவர்களை மிரட்டுகின்றனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.