பக்கங்கள்

15 ஜூன் 2011

நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்!சனல் போர் ஆதாரம்!

புலம்யெர்ந்த தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘இலங்கையின் படுகொலைக்களங்கள்’ என்ற ஒரு மணிநேரக் காணொளிப் பதிவை பிரித்தானியாவின் Channel-4 தொலைக்காட்சி நேற்றிரவு (14-06-2011) 11:00 மணிக்கு ஒளிபரப்பியுள்ளது.
பலரது கடின உழைப்பில் வெளியான இந்தக் காட்சிப் பதிவு, நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களிற்கு கிடைத்த மற்றொரு அரிய சாட்சிப் பதிவாகும்.
இந்த விவரணக் காணொளிப் பதிவில் வன்னியின் இறுதிப் போர் காலத்தில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இருந்த கோர்டன் வைஸ், கிளிநொச்சியில் பணியாற்றி, அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்ட மனிதநேய பணியாளர். போரில் படுகாயமடைந்த மக்களிற்கு மருத்துவ உதவி புரிந்திருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ்வாணி, அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி, அனைத்துலக மனித உரிமைகள் சட்டவாளர் வில்லியம் மற்றும் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மூவர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், வன்னியின் இறுதிப் போரில் தமிழர் தரப்பால் எடுக்கப்பட்ட காணொளிகள், சிறீலங்கா படையினரால் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்ட காணொளிகள், மற்றும் சிறீலங்கா படையினர் போர்க்குற்றம் புரிந்தபோது கைத்தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட காணொளிகள் என்பன இதில் அடங்கியிருந்தன.
வன்னியில் பொதுமக்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் மட்டுமன்றி, பெண் போராளி ஒருவர் உட்பட மூன்று போராளிகள் அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப்படும் புதிய போர்க்குற்ற சாட்சி ஒன்றும் இந்தப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் படுகொலை, மற்றும் தற்பொழுது இலங்கைக்கு வெளியே உள்ள அவரது மனைவி அவரது உடலை அடையாளம் காட்டியதால், அது போர்க்குற்றமாக நிருபணமானதும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் படையினரது சம்மதத்துடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிழற்படங்களும் காண்பிக்கப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்து தாம் வெளியிட்டுள்ள இந்த ஆதாரங்கள் நிச்சயம் போர்க்குற்றம், மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்களாக அமைந்துள்ள என வாதிடும் சனல்-4 தொலைக்காட்சி, குற்றங்கள் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்களாகவும் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.
இறுதிப் போரில் ஈடுபட்ட இருதரப்பும் போர்க்குற்றம் புரிந்திருப்பதாக இந்தத் தொலைக்காட்சி கூறுகின்ற போதிலும் சிறிலங்கா படையினர் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களையே அதிகம் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்தளமாகவும், கிறிகெட் விளையாடும் இடமாகவும் இருக்கும் இலங்கைத்தீவிற்கு இன்னொரு முகமும் இருக்கின்றது என ஆரம்பிக்கும் விவரணப்படம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்பு படைத்துறை நிருவாகம் என வர்ணிக்க முற்படுகின்றது.
ஆனாலும், அங்கு காவல்துறை, நீதித்துறை, வைப்பகம் என்பன இருந்தன என்றும், 2008ஆம் ஆண்டு ஐ.நா உட்பட வெளிநாட்டு மனிதநேய அமைப்புக்களை அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா அரசாங்கம் பணித்தபோது, மக்கள் கதறி அழுததையும் காண்பிக்கும் இந்தத் தொகுப்பு, இதுவே ஐ.நா செய்த முதல் தவறு என நிரூபிக்கின்றது. ஐ.நா அங்கு இருந்திருந்தால் பொதுமக்களின் இழப்பைக் குறைத்து, உண்மையைக் கண்டறிந்திருக்கலாம் என வாதிடப்படுகின்றது.
படைத்துறை தவிர்ந்த பொதுக்களை இலக்கு வைத்து சிறீலங்கா படையினர் மிக மோசமான தாக்குதல்களை நடத்தினர் எனத் தெரிவிக்கும் சனல்-4 தொலைக்காட்சி, பாதுகாப்பு வலயத்தில் மருத்துவமனைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளது.சிங்களம் புரிந்த படுகொலைக் களத்தை காண கீழே உள்ள இணையத்தை அழுத்தவும்.
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.