தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரும் பிஜேபியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது.பின்னர் சுஷ்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக வெற்றிபெற்றதற்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தச் சந்திப்பு சிறப்பாக அமைந்தது.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவது பற்றி பேசினோம்.இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகவும், தமிழக மீனவர் பிரச்னைக்காகவும் நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் நகலை அனுப்புமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டேன். இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
அதேவேளை இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் இடம்பெயர் மற்றும் மீள் குடியேற்ற மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் இடம்பெயர் மக்கள் குறித்து பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம் செய்திருந்த போது இடம் பெயர் மக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த சந்திப்பின் போது ராஜபக்ஸ இடம்பெயர் மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதாக உறுதிமொழி வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.