பக்கங்கள்

08 ஜூன் 2011

கொக்குவிலில் மாணவியை கடத்த முயற்சி,வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய மாணவனை காணவில்லை!

வெள்ளை வானில் மாணவியொருவரை கடத்த முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை 7.30 மணியளவில் கொக்குவில் அம்மன் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது இருவர் இந்த மாணவியை பின் தொடர்ந்துள்ளனர்.
இவர்களின் பின் வெள்ளை வான் ஒன்று இருபக்க கதவுகளையும் திறந்த நிலையில் பின் தொடர்ந்து வந்துள்ளது. குறித்த நபர்களின் நோக்கத்தையறிந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அருகிலிருந்த பாடசாலையொன்றிற்கு சென்று அதிபர், ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து அப்பாடசாலையின் அதிபர் ஊடாக குறித்த மாணவி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்று வரும் மாணவி ஒருவரையே இவ்வாறு கடத்த முற்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை யாழ். வேலணை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் அம்மாணவனின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் அனுஷ்டன் (வயது 16) என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவன் கடந்த 30ஆம் திகதி யாழ். வேலணையிலுள்ள தனது வீட்டிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளாரென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்மாணவனைத் தேடும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.