பக்கங்கள்

14 ஜூன் 2011

போர்க் குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் சிறீலங்கா அரசாங்கம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என, பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர்(அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத்தீவின் அண்மைய அரசியல் நிலை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை அம்மையார் ஆற்றிய உரை என்பன பற்றி அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் இடையான பகுதியில் சிறீலங்கா அரசாங்க படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவை போர்க்குற்றத்திற்கு இட்டுச் செல்லும் எனவும், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்பதுடன், அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் சொந்த விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை பற்றி பரந்துபட்ட கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆணைக்குழு அனைத்துலகப் பிரதிநிதிகளையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், ஏற்கனவே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள 2011 நவம்பருக்கு முன்னர் தனது அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த அறிக்கை ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் அவசியம்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்ப ஒரேயொரு வழி, உண்மையான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நீதி கடைக்க வழி செய்து, போர்க்குற்றம் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மட்டுமே.
இவ்வாறு பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகாரச் செயலர் (அமைச்சர்) டக்ளஸ் அலென்சாண்டர் (Douglas Alexander) தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.