சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்யவிருந்த உலங்குவானூர்தியில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்த விடயம் கடைசிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கிளிநொச்சி சென்றிருந்தார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தெற்காசியாவில் மிக உயரமான இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரம் அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா அரச தொலைக்காட்சி, வானொலிச் சேவைகளைத் தரமுயர்த்தவும் இது பயன்படுத்தப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் இதனை வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது.
இந்தக் கோபுரத் திறப்பு விழாவுக்கு சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் புறப்பட முன்னரே ரணில் விக்கிரமசிங்கவின் தயார் நளினி விக்கிரமசிங்கவின் மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.
மாலையில் இறுதிநிகழ்வுகள் நடைபெறவிருந்ததால் சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் அவசரமாக கொழும்பு திரும்ப முயன்றனர்.
அவர்களை ஏற்றிச் செல்ல முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு உலங்குவானூர்திகள் கிளிநொச்சியில் காத்திருந்தன.
அவற்றில் ஒன்றில் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் மாலை 5 மணியளவில் கொழும்பு திரும்பி நளினி விக்கிரமசிங்கவின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தினார். ஆனால் கோத்தாபய ராஜபக்ச வரவில்லை.
அவரும் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும் பயணம் செய்வதற்காக உலங்குவானூர்தியில் ஏறி அமர்ந்திருந்த நிலையில்- அதில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுபிடித்தார்.
இதனால் அதில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று விமானி கூறியதால், வேறொரு நிரந்தர இறக்கை விமானம் மூலம் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு வர நேரிட்டது.
உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு கடைசிநேரத்தில் கண்டிபிடிக்கப்படாது போயிருந்தால், நடுவானில் பாரிய விபத்து ஒன்றை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என்று சிறிலங்கா விமான்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.