பக்கங்கள்

22 ஜூன் 2011

பருத்தித்துறையை சேர்ந்தவருக்கு பிரான்ஸ் அரசின் செவாலியர் விருது.

யாழ்,பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை அவர்களுக்கு கௌரவப் பட்டம் வழங்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு "செவாலியர்" என்னும் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பட்டம் பிரெஞ்சு நாட்டுத் தேசிய திறமைப் பட்டியலில் இடம் பெறுகின்றது.
இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில் திரு. வேலுப்பிள்ளை பம்பாயில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார். சட்டத்தரணியான அவர் பாரிஸில் சர்வதேசப் பொருளாதார உறவுகள் என்னும் துறையில் பட்டப்பின் கற்கைநெறியில் தகைமை பெற்றார். இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யவும் இந்தியாவில் முதலீடு செய்யவும் விழைந்த பிரெஞ்சுக் கம்பெனிகளுக்கு அவர் சர்வதேச வர்த்தக நெறிகளுக்கு அமைய சட்டஆலோசனைகளை வழங்கினார்.
பிரெஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவரான அவர் பிரெஞ்சு அரசாங்கத்துக்காக பல நூல்களை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார். நானூற்று பன்னிரெண்டு பக்கங்கள் கொண்ட இந்தியாவில் முதலீடு செய்தல் தொடர்பான அவரது நூல் பிரெஞ்சுக் கம்பெனிகள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. வெளிநாட்டு முதலீடு ஏற்றுமதி - இறக்குமதி என்னும் விடயங்கள் பற்றிய பிரெஞ்சுமொழி நூல்களுள் இந்த நூல் கணணிவழி விற்பனை நிறுவனமான "அமேசன்" நிறுவனத்தின் சிறந்த விற்பனைப்பட்டியலில் நீண்டகாலம் தொடர்ச்சியாக முதல் நூறு இடங்களுள் ஓர் இடத்தைப் பெற்று வந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த நூல் 2010ஆம் ஆண்டில் மாற்றீடு செய்யப்பட்டபின்னரும்இ புதிய நூலுடன் இந்த நூலும் முதல் நூறு இடங்களுள் இன்றும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்தல் வர்த்தகம் செய்தல் என்னும் விடயங்கள் தொடர்பில் அவர் பாரிஸில் பல கலந்துரையாடல்களிலும் கூட்டங்களிலும் பங்குபற்றி பிரெஞ்சுமொழியில் உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
அவரது இச்சேவைகளைப் பாராட்டுமுகமாக பிரெஞ்சு அரசாங்கம் "செவாலியர்" என்னும் விருதை அவருக்கு வழங்கவுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் கொழும்பில் ஜூன் மாதம் 27ஆந் தேதி மாலை நடைபெறவுள்ளது.
தாய்மொழியான தமிழுடன் திரு. வேலுப்பிள்ளை ஆங்கிலம் பிரெஞ்சு சிங்களம் இந்தி என்னும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.
திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன் திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார். காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.