2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த, தென்னிந்தியப் பண்பாட்டை ஒத்த மக்கள் கந்தரோடையில் வாழ்ந்துள்ளனர் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி தெரணியகல தெரிவித்தார்.
'கந்தரோடையில் புராதன குடியிருப்பு நகரம் இருந்ததுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையின் ஏனைய இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கந்தரோடையிலும் மக்கள் வாழ ஆரம்பித்துள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. கந்தரோடையில் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெரணியகல தெரிவித்துள்ளார். தொல்லியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் காலநிதி நிமல் பெரேரா உள்ளிட்ட தெற்குக் குழுவினருடன் கலாநிதி தெரணியகல நேற்று கந்தரோடைக்கு வந்திருந்தார். யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணமும் அவர்களுடன் இணைந்திருந்தார்.
யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறையும் இலங்கைத் தொல்லியல் திணைக்களமும் இணைந்து கந்தரோடையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தன. இரண்டு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவை தற்போது நிறைவு பெற்றுள்ளன.
இந்த ஆய்வுகளிலிருந்து, கந்தரோடையில் புராதன குடியிருப்பு மட்டுமின்றி அந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சி அண்மைக்காலம் வரை அந்தப் பிரதேசத்தில் காணப்பட்டமையும் தெரியவந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் குறித்து, கலாநிதி தெரணியகல கந்தரோடையில் வைத்து ஊடகங்களுக்கு விளக்கினார்.
அகழ்வாராய்ச்சியின் போது, மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், மணிகள், ரோமன் கால மட்பாண்டங்கள், தென்னிந்திய புராதன நாணயங்கள், வடஇந்தியாவின் கங்கைப் பகுதிக்குரிய கறுப்பு நிறத்தினாலான பளபளப்பான மணிகள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.தென்னிந்தியப் பொதுப் பண்பாட்டுக்கான சான்றுகளே அதிகளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கிருந்துள்ள மக்கள் ரோம் போன்ற நாடுகளுடன் அந்தக் காலத்திலேயே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள் என்பதனையும் அறிய முடிகிறது.
இந்த ஆதாரங்கள் மூலம் கந்தரோடையில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆய்வின் போது, காலத்தைத் திட்டவட்டமாகக் கணிப்பிடக்கூடிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றை மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் உறுதியான முடிவுகள் கிடைக்கும். அதற்காக அவற்றை அமெரிக்காவிலுள்ள சர்வதேச தொல்லியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பவுள்ளோம். ஆறு மாத காலத்தில் அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரணியகல கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.