பக்கங்கள்

22 ஜூன் 2011

அரசின் செயற்பாடுகளால் பேச்சுக்களிலிருந்து விலகும் நிலை ஏற்படலாம்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படாது எனவும், கால நேரம் வீண் விரயமாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் தெரிவுக் குழுக்களின் பரிந்துரைகளின் மூலம் பல்வேறு தரவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன திம்பு பேச்சுவார்த்தைகளையும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொழும்பில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மங்கள முனசிங்க ஆணைக்குழுவினை நிறுவியதாகவும், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனையை முன்வைத்ததாகவும், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சிப் பேரவை பரிந்துரைகளை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து குழுக்களும் வடக்கு கிழக்கு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து ஒவ்வொரு மாதிரியான தீர்வுத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.
அநேகமான குழுக்களில் பெரும்பான்மையாக சிங்களப் பிரதிநிதிகள் அங்கம் வகித்த போதிலும் சில முற்போக்கான யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையில் தயாரிக்கப்பட்ட சர்வகட்சிப் பேரவை அறிக்கை பரிந்துரைகளை அநேகமான அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சிப் பேரவையில் பல சாதகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சிப் பேரவையில் அங்கம் வகிக்காத போதிலும், சர்வகட்சிப் பேரவையின் பரிந்துரைகள் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் ஏன் புதிதாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை அமைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவினை அமைக்குமாறு யார் கோரினார், யாரின் தேவைக்காக இது அமைக்கப்படுகின்றது என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த பெப்பரவரி மாதம் முதல் இதுவரையில் ஆறு தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 850 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என சில முக்கிய யோசனைகளை கட்சி சமர்ப்பித்த போதிலும் அவற்றை அரசாங்கம் இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் தேவையற்ற விடயங்கள் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடடுள்ளார்.
அரசாங்கம் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை எனவும் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும் என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை விவகாரங்கள் குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இராணுவத்தினர் தமது கட்சி மீது நடத்திய தாக்குதல்களின் பின்னரும் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.