பக்கங்கள்

07 ஜூன் 2011

போராளிகளை விடுதலை செய்வதாக ஏமாற்றிய ஸ்ரீலங்கா அரசு.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 900 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய பிரச்சாரங்கள் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. அது மட்டும் அல்லாது 900 முன்னாள் உறுப்பினர்களின் உறவினர்களுக்கு விடுவிப்புக் குறித்த தகவல்களும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வாயிலாக அனுப்பப்பட்டன.
இதன் அடிப்படையில் தமது உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தூர இடங்களில் இருந்தெல்லாம் மக்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் வவுனியாவில் குவிந்தார்கள்.
இந்த விடுவிப்பு நிகழ்வுக்காக அரசாங்கம் வவுனியாவில் பெரும் கழியாட்ட நிகழ்வொன்றையும் கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் ஒழுங்கு செய்திருந்தது. அதில் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட 900 முன்னாள் போராளிகளும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் தமது உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டனர்.
இதனோடு கிரிக்கட் திருவிழா ஒன்றும் அரங்கேறியது. உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக காதில் போட்டிருந்த தோட்டை அடகுவைத்து வவுனியா வந்த முன்னாள் போராளிகளின் மனைவிமார், கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகளை விற்று தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தாய்மார் எல்லோரும் கொடும் வெய்யிலில் அமைச்சர்கள் ஆடிய கிரிக்கட்டை பார்த்தார்கள். மாலைவரை 4 அணிகள் ஆடிய கிரிக்கட் மட்டை ஆட்டத்தை பார்த்தார்கள்.
முன்னாள் போராளிகள் அணி, இளைஞர் சேவை மன்றம் அணியுடன் மோதியது. இளைஞர் சேவை மன்றம் அணி வெற்றி பெற்றது. மறுபுறம் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் அணி புனர் வாழ்வு அமைச்சர் சந்திரசிறீ கஜவீர தலைமையிலான அணியுடன் மோதியது. அதில் டளஸ் அழகப்பெரும அணி வென்றது.
பின்னர் 4 அணியில் இருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இரு அணிகளாக சினேகபூர்வ ஆட்டத்தில் ஆடினர். இதில் டளஸ் அழகப்பெருமவின் அணி வெற்றி பெற்றதோடு மான் ஒவ் த மச் ஆக டளஸ அழகப்பெரும தெரிவானார்.
இவற்றை எல்லாம் தோட்டையும் சங்கிலியையும் அடகு வைத்து சென்றவர்கள் பார்த்தார்கள். கிரிக்கட் முடிய இரவு இசைப் பெருவிழா. ஆடல் பாடல் கொண்டாட்டம். அதனையும் பார்த்தார்கள். காரணம் காலையில் 5ஆம் திகதி தம்மவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில்.
ஆனால் நடந்ததோ வேறு. விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட 900 பேரில் 357பேர் மட்டும் விடுதலையானார்கள். மிகுதிப்பேர் விடுவிக்கப்படவில்லை. ஆற்றாமையால் மக்கள் அழுதார்கள். ஓவென்று அலறினார்கள். கடுமையான விரக்த்தியில் கோசம் எழுப்பினார்கள். அதனைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?
ஆற்றாமையினால் அரச அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள், ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்ணாள் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஸோர் என அனைவருடனும் பேசினர். கிடைத்த பதில் விடுதலை செய்வதற்கான பத்திரங்கள் பதியப்படும் வேலைகள் முடியவில்லை. முடிந்தவுடன் விடுதலை செய்யப்படுவர் என்பதாக அமைந்தது. 2 வருடங்களாகியும் முடியவில்லையா என மக்கள் அழுது புலம்பினார்கள். இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பெரும்பான்மையின அரச அதிகாரிகளுக்குக் கூட தாங்கமுடியாத வேதனை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.