பக்கங்கள்

28 ஜூன் 2011

புத்தூரில் இளைஞன் மரணம்!சீ.ஐ.டியினர் மீது சந்தேகம்.

புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று உடற் கூற்றுப் பரிசோதனையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை.
எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இருந்தார் என்று சி.பாலச்சந்திரன் தெரிவித்தார்.மயிலிட்டியைச் சேர்ந்த இவரும் மகனான சற்குணநாதன் (வயது30) என்பவரும் இடம் பெயர்ந்து அச்சுவேலி தோப்புக் காட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, புத்தூர் கிழக்கு, எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் கால்கள் நிலத்தில் முட்ட, கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் சற்குணநாதன் சடலமாக மீட்கப்பட்டார்.இறந்த இளைஞனின் உடற் கூற்று மருத்துவப் பரிசோதனை நேற்று நடந்தது. பிரஸ்தாப இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியங்களே அதிகம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்த சி.பாலச்சந்திரன் தனது மகன் கொலை செய்யப்பட்டிருப்பார் என்றே தான் சந்தேகிக்கிறார் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
எனது மகன் கடந்த நான்கு வருடங்களாக கொழும்பில் தொழில் செய்து வந்தார். இந்த வருடம் ஜனவரியில் இருந்து யாழ்ப்பாணத்தில் என்னுடன்தான் வேலையில்லாமல் தங்கியிருந்தார்.கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் முஸ்லிம் பெண் ஒருவரைக் காதலித்திருந்தார். ஆனால் யாழ்ப்பாணம் வந்த பின்னர் அவருக்கு வேறு பெண்ணை நான் பதிவுத் திருமணம் செய்து வைத்தேன்.
இதன் பின்னர் எனது மகனுக்கும் எனக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் குறித்த பெண்ணின் உறவினரான அதிகாரி ஒருவரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. எனது மகனையும் மருமகளையும் கொன்று விடுவேன் என்று சி.ஐ.டி. ஆள் மிரட்டினார்.
இந்த மிரட்டல்கள் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாரிடம் முறையிடச் சென்றபோது, அவர்கள் எனது முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டார்கள். இந்த மிரட்டல்களால் எனது மகனைப் பதிவுத் திருமணத் செய்திருந்த பெண்ணும் விவாகரத்துப் பெற்று விட்டார்.கொழும்பில் இருந்த போது எனது மகன் அந்த முஸ்லிம் பெண்ணுடன் இணைந்து (Joint Account) வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் மகனைக் கொழும்புக்கு அழைத்த குறித்த முஸ்லிம் குடும்பத்தினர் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்காகக் கையொப்பம் வாங்கினர்.
அந்தக் கணக்கிலிருந்த எனது மகனின் பங்குப் பணத்தை தருவதாகத் தவணை சொல்லி வந்தனர். கடைசியாகக் கடந்த மே, 31 ஆம் திகதி எனது மகன் கொழும்பு சென்று வந்தார். அப்போது அவர்கள், பணம் பெற இந்த மாதம் 13ஆம் திகதி வருமாறு சொல்லியிருந்தார்கள். ஆனால் அவனைப் போகவேண்டாம் என்று நான் தடுத்து விட்டேன்.சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னர் எனது மகன் தன்னுடைய சிங்கள நண்பர்கள் சுற்றுலாவுக்காக யாழ்ப்பாணம் வந்து நிலாவரை இராணுவ முகாம் பகுதியில் நிற்கின்றனர் என்று கூறிவிட்டு சென்றார். இரவு 9.30 மணிவரை அவர் வீடு திரும்பவில்லை. கைத்தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தபோது அது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சற்று நேரத்தின் பின்னர் மகன் வீடு வந்து சேர்ந்தான். தாமதம் குறித்துக் கேட்டபோது யாழ்.நகரில் உள்ள இராணுவ முகாமுக்குத் தன்னை அழைத்துச் சென்றிருந்தனர் என்று சொன்னார். இதன் பின்னர் மூன்று நாள்களாக மனச்சோர்வுடன் காணப்பட்டார்.
இவ்வாறானதொரு நிலையிலையே, கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கின்றார். அவர் வீட்டை விட்டு புறப்படும்போது நான் இல்லை. மறுநாள் காலையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடக்கிறார் என்று அயலவர்கள் வந்து சொன்னார்கள். தற்கொலை செய்வதானால் வீட்டி லேயே செய்திருக்க முடியும். இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்து தற்கொலை செய்யத் தேவையில்லை என்றார் பாலச்சந்திரன்.
இதேவேளை, புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன் தினம் மீட்கப்பட்ட சடலம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது என சடலத்தை பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த சடலத்தை கழுத்து நெரித்துக் கொலை செய்ததுடன் கையிலும் கால்களிலும் உரசல் காயங்கள் காணப்படுவதாகவும் உடலில் இரத்தக் கசிவு காணப்படுவதாகவும் வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கால் தரையில் ஊன்றிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாகவும், கயிறு இறுக்கி தற்கொலை செய்யப்படவில்லையெனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.