நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா கடுமையான ஆத்திரம் அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் என்ன நடைபெற்றாலும் சிலர் முதலில் அமெரிக்க தூதரகத்தில் சென்றே முறையிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையில் முறையிடுவதை தவிர்த்துள்ள சிலர் அமெரிக்க தூதரகத்தில் சென்று முறையிட்டுள்ளனர் என நுகெகொட பகுதியில் நேற்று (17) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசிய கோத்தபாயா தெரிவித்துள்ளார்.
தற்போது எம்மை அமெரிக்க தூதரகமே முதலில் விசாரணை செய்கின்றது. அண்மையில் கட்டுநாயக்கா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் ஜேர்மன் தூதரகம் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் கோத்தாவின் இந்த குற்றச்சாட்டை தமிழத் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது.
தெல்லிப்பளையில் உள்ள சிறீலங்கா காவல்துறையில் தான் முதலில் தாம் முறைப்பாட்டை மேற்கொண்டதாகவும். தமது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அமெரிக்க தூதரகத்தில் சென்று முறையிடவில்லை எனவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.