தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் நடத்திவரும் பேச்சுக்களின் மூலம், தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று அரசதரப்பு தெரிவித்துள்ளது. எனவே விரைவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
"அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட 7 சுற்றுப் பேச்சுக்களின் பின்னரும் அதிகாரப் பகிர்வு குறித்து இணக்கம் இது வரை எட்டப்படவில்லை. எதிர்காலத்திலும் எட்டப்படும் என்ற நம்பிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது" என்று அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
"எனவே மாற்றீடாக மாகாண சபைத் தேர்தலை நடத்தித் தமிழ் மக்களிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது என்று அரசு ஆலோசித்து வருகின்றது'' எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக 5 விடயங்களை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
* இடம்பெயர்ந்த மக்களை முழு அளவில் மீளக் குடியமர்த்தல்.
* பொது மன்னிப்பு வழங்கி, புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் அனைவரையும் விடுதலை செய்தல்.
* கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தல்.
*மீளக்குடியமர்த்த முடியாத நிலையில் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
* 2010ஆம் ஆண்டுக்கான தேர்தல் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
ஆகிய விடயங்களையே உடனடியாகச் செயற்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.வடமாகாணத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக இவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று அரச வட்டாரம் தெரிவித்தது.தனியார் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சித்த போது நாடு முழுவதும் அதற்கு உறுதியான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை அறிவிப்பதற்கு அரசு தயங்குகிறது என்று மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.