பக்கங்கள்

01 பிப்ரவரி 2012

மீசாலை கொலை சந்தேக நபர்கள் பிணை கோரிய மனு வழக்கு ஒத்திவைப்பு.

கனடாவிலிருந்து நாடுதிரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் வேறு நபர்களுடன் சேர்ந்து தனது மனைவியைக் கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பிணை விண்ணப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி மீசாலையில் வைத்து குகதாஸ் சாந்தினி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று சந்தேக நபர்களில் இருவரின் சார்பில் இந்த விண்ணப்பங்கள் பிணை கோரித் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தக் கொலை தொடர்பில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் ஐந்து சந்தேக நபர்கள் கொலை நிகழ்ந்த மறுநாள் தொடக்கம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஐவரில் இளம்பெண் ஒருவர் உட்பட இருவருக்கு யாழ். மேல் நீதிமன்று ஏற்கனவே பிணை அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஏனைய சந்தேக நபர்களில் கொலையுண்டவரின் கணவர் தவிர மற்றைய இருவர் சார்பிலும் பிணை கோரும் விண்ணப்பங்கள் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன் போது அரச சட்டவாதி வி.திருக்குமரன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கில் சாவகச்சேரி நீதிமன்றில் பூர்வாங்க விசாரணை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லையெனத் தெரிவித்த அரச சட்டவாதி, கொலையுண்டவரினதும் அவரது கணவரான முதலாம் சந்தேக நபரினதும் மகனான 14 வயதுடைய சிறுவன் முக்கிய சாட்சியாகச் சாட்சியமளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் பிணையில் விடப்பட்டால் அவர்கள் சாட்சியங்களில் தலையீடு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு முன்னதாகப் பிணை விண்ணப்பங்களை ஆதரித்து வாதாடிய சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று தெரிவித்திருந்தார்.
இருதரப்பு சமர்ப்பிப்புகளின் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி, சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப அறிக்கை மற்றும் தொடர் அறிக்கைகள் உட்படப் பிணை மனுக்கள் தொடர்பாக பொருத்தமானவையாகத் தோன்றும் வழக்கு ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் மனுதாரர்கள் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தல் வேண்டும்.
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால் மாத்திரமே இந்த வழக்கு தொடர்பான சகல விடயங்களையும் பரிசீலிப்பதற்குப் பிணை மனுக்கள் தொடர்பாக உரிய கட்டளையை நீதிமன்றினால் வழங்க முடியும் என்று தெரிவித்துப் பிணை மனுக்கள் இரண்டையும் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இந்தப் பிணை மனுக்கள் வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களான பால்றாஜ்மோகன் பிரசாத், நவரத்தினம் கோபிகிருஷ்ணா ஆகியோரின் தாய்மார்களால் சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரனூடாக மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.