பக்கங்கள்

14 பிப்ரவரி 2012

சிங்கள மாணவனின் பொய் முறைப்பாட்டால் தமிழ் மாணவன் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்திய செயலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு இம் முறை சிங்கள மாணவர்களும் தெரிவாகியிருந்தனர். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களில் ஒருவர், ‘மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தனக்கு பகிடிவதை செய்து துன்புறுத்தினார்’ என்று பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு ஒன்றைக் கொடுத்தார்.
இந்த முறைப்பாட்டைச் சாட்டாக வைத்து அவர் தற்போது தென்னிலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று கற்கையைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சிங்கள மாணவனின் முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து குறித்த விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தும் முடிவை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு பக்கச் சார்பானது எனத் தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவனை மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“குறித்த சிங்கள மாணவர் யாழ்.பல்கலையில் கற்பதை ஆரம்பம் முதலே விரும்பவில்லை. பகிடிவதை முறைப்பாடு ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதனை காரணங்காட்டி தான் நினைத்தபடி வேறொரு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்டார். குறித்த சிங்கள மாணவர் கொடுத்த முறைப்பாடு தவறானதென்றும், மாணவர் விடுதியில் அவ்வாறான பகிடிவதை எதுவும் நடக்கவில்லை என்றும் அங்குள்ள சிங்கள மாணவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
அதனைக் கணக்கில் எடுக்காது, முறைப்பாடு கொடுத்த சிங்கள மாணவர் சமூகமளிக்காத நிலையிலும் கூட, எமது சக மாணவன் மீது நியாயமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு கொடுத்த சிங்கள மாணவன் பாரிய அரசியல் பின்புலம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே இவ்வாறான பக்கச்சார்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கண்டித்து விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் சாதகமான முடிவு கிடைக்காத பட்சத்தில் சகல பீடங்களையும் இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்வது பற்றி ஆராயவுள்ளோம்”.-
என்று விஞ்ஞானபீட மாணவர்கள் தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.