பக்கங்கள்

26 பிப்ரவரி 2012

இனி கூட்டமைப்பு இருப்பதும் இல்லாமல் போவதும் ஒன்றே!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது,தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதொரு காலகட்டம் இதுவாகும். சர்வதேசத்தின் பார்வை முழுமையாக இலங்கைத் தீவின் மீது இன்று விழுந்திருக்கின்றது. இந்த நிலையில் 60 வருட காலமாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று கிடைத்திருக்கின்றது.
எனவே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற கோணத்தில் எமது மக்கள் சர்வதேசத்திடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய வேண்டிய கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. ஆனால் இந்தக் கடமைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சோகமளிக்கக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப் போவதாக அறிகின்றோம்.
எனவே இந்த ஜெனிவா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை அவர்களுடைய மனோநிலையை வெளிப்படுத்த முடியாத போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி இருப்பதும், இல்லாமல் போவதும் ஒன்றே. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு தமிழ் மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏறபடுத்தியிருக்கின்றது’ என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதில் எவ்வித தடைகளையும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.