பக்கங்கள்

21 பிப்ரவரி 2012

அது எந்த நாடு?குழப்பத்தில் சிறீலங்கா!

ஜெனிவாவில் வரும் 27ம் நாள் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தத் தீர்மானத்தை அமெரிக்காகவே சமர்ப்பிக்கலாம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது.
ஆனால், அமெரிக்கா இராஜதந்திரிகள் பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பில் வைத்து சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா இதனை சமர்ப்பிக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது சிறிலங்கா. அதேவேளை அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த மற்றொரு அறிக்கை, கனடா இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறியது.
கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் கனடா ஈடுபட்டிருந்தது. ஆனால், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த முடிவைக் கனடா கைவிட்டிருந்தது. எனவே இம்முறையும் கனடா இதற்குத் தலைமை தாங்கலாம் என்று அந்தத் தகவல் கூறியது.
இந்தநிலையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் வேறொரு நாடு இந்தத் தீர்மானத்தை முன்மொழியலாம் என்றும் கருதுகின்றனர். அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று சிறிலங்கா அதிகாரிகள் நம்புகின்றனர்.
அது அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா அதிகாரிகள் கருதுகின்றனர். இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கலாம் என்ற பரவலான கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.