பக்கங்கள்

20 பிப்ரவரி 2012

பீரிஸ் அமெரிக்கா செல்லமாட்டாராம்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் குறித்த சிறிலங்காவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்.
ஆனால் ஹிலாரியின் அழைப்பையேற்று அடுத்தமாதம் அவர் அமெரிக்கா செல்லமாட்டார் என்று தெரிகிறது. அடுத்த மாதம் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதே இதற்கான அதிகாரபூர்வ காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இருந்தபோதிலும், ஏப்ரல் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பீரிஸ் ஆலோசிக்கலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தின் முடிவில் உறுதிமொழிகள், கடமைகள் குறித்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அஞ்சியே பீரிஸ் அமெரிக்கா செல்லத் தயங்குவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் உலாவும் கதைகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
இன்னொரு புறத்தில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பீரிஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.