பக்கங்கள்

05 பிப்ரவரி 2012

திருமலையில் சிங்களவர்களின் தாக்குதலுக்கு உள்ளானோரை கஜேந்திரன் சந்தித்தார்.

திருமலையில் சிங்களவர்களின் தாக்குதலில் காயமடைந்தோரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா் நேரில் சந்த்திதுள்ளனா். கடந்த 28-1-2012 அன்று திருகோணமலை நகரசபை எல்லைக்குட்பட்ட மட்டக்களி என்னுமிடத்தில் உள்ள விநாயகபுரம் என்ற கிராமத்தினுள் புகுந்த சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவெறித் தாக்குதலை நடாத்தியிருந்தனா்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனா். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரும், உபதலைவா்களில் ஒருவருமான ஹரிகரன், மற்றும் பொது செயலாளா் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று காடையா்களால் தாக்கப்பட்ட பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், சேதமாக்கப்பட்ட வீடுகளின் வாயில் கதவுகளையும் பார்வையிட்டுள்ளனா்.
தாக்குதல் நடாத்திய சிங்களவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது “இது எங்கட இடம் இங்க இருக்கிற தமிழா்கள் அனைவரும் நாளை காலை விடிவதற்குள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்” என்று கத்தியவாறு தாக்குதல் நடாத்தியதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனா். மேலும் சிங்களவா்கள் வந்திருக்கின்றோம் யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் கூக்குரலிட்டு எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனா்.
தாக்குதல் நடத்தியவா்கள் வாள்கள், மற்றும் கற்கள் கொண்டு தாக்கியதாகவும், கொட்டன்கள் மற்றும் கைகளாலும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனா். இத் தாக்குதலை நடாத்தியவா்கள் நன்கு திட்டமிட்டு இப்பகுதியில் குடியிருக்கும் தமிழ் மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமையை நன்கு உணரக்கூடியதாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.