தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வுகளில் அறிவிக்கப்படவுள்ளதாக திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைப் போன்று செயற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு அமர்வுகளில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் டோசி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர், கூட்டமைப்பின் குற்றச் செயல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் என்ன செய்ய வேண்டும் என்பதனை, புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனினால் பெயரிடப்பட்ட மூன்று பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் பதுங்கு குழிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதி வீட்டில் இருக்கின்றாரா என்ற உளவுத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கியதாக உயிரிழந்த அரசியல்வாதியின் மகன், அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்று நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்துவேன் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, 37 அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஜெனீவா செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.