பக்கங்கள்

02 பிப்ரவரி 2012

கோத்தபாயவும் ஏ.கே.அந்தோனியும் சந்தித்து பேச்சு.

இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றுள்ளார். இந்தியா – சிறிலங்கா இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமாகியது.
இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்த சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பபட்டது. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று புதுடெல்லி சென்றடைந்தது.
நேற்று புதுடெல்லி சவுத் புளொக்கில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்,வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், இந்திய பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா ஆகியோரை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் பாதுகாப்புக் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பேச்சுகளில், இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும், ஏனைய நிறுவனங்களிலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்த கலந்துரையாடப்படவுள்ளதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.