பக்கங்கள்

17 பிப்ரவரி 2012

விலையேற்றத்தால் யாழ்,மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்!

எரிபொருள்களின் விலைகளை அரசாங்கம் திடீரென பாரியளவில் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாண குடாநாடு உள்ளிட்ட வட மாகாணத்தில் பொருள்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படப் போகும் மாவட்டமாக யாழ்ப்பாணமே கருதப்படுகிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.. யாழ்ப்பாண மாவட்டம் தனது உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளுக்காக தெற்கையே நம்பி இருப்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்துப் பொருள்களும் தெற்கிலிருந்து தரை அல்லது கடல் மார்க்கமாகவே அங்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கிறது. எரிபொருள் விலையேற்றம் போக்குவரத்துச் செலவை மேலும் அதிகரிக்கும் நிலையில் பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று மத்திய வங்கியின் பொருளாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுகள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்திற்கும் வடபகுதி, தென்னிலங்கையிலேயே தங்கியிருப்பதால் அவற்றின் விலையில் உடனடித் தாக்கம் இருக்கும் என்வும் அவர் கூறினார். ஒரு மனிதனின் ஒரு மாதத்துக்குரிய ஆகக் குறைந்த வாழ்க்கைச் செலவு சுட்டெண் நாட்டின் ஏனைய இடங்களைவிட யாழ்ப்பாணத்திலேயே அதிகமாகவுள்ளது.
இலங்கையின் சராசரி வாழ்க்கைச் செலவு 3,307 ரூபாவாக இருக்கையில் யாழ்ப்பாணத்தில் அது 3,555 ரூபாவாகக் காணப்படுகின்றது. உணவு மற்றும் உணவல்லாப் பொருள்களின் நுகர்வு விலையைக் கொண்டே வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் கணிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் கூட இந்த நிலையே காணப்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.