யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தைப் பூங்காவை மூடிவிட்டு அக்காணியை வேறு தனி நிறுவனங்களுக்கோ அரச நிறுவனங்களுக்கோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை நிறுத்தி யாழ் மாநகரசபை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி துணைச் செயலாளர் சி. வி. கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்குறிப்பிட்டுள்ள பூங்காவை மூடிவிட்டு அந்த நிலத்தை வேறு சில அரச நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிவித்துள்ளோம்.
தாங்கள் அறிவித்திருக்கக்கூடிய வகையில் இந்தப் பூங்கா வரலாற்று பெருமை மிக்க நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அதன் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் பேண நாம் ஆவலாக உள்ளோம்.
இந்த வளவை ஊடறுத்து சென்ற செம்மணி வீதியின் ஒரு பகுதியை தெற்குப் புறத்துக்கு மாற்றியே யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தின் ஒரேயொரு இரண்டாவது பூங்காவாக இது ஸ்தாபிக்கப்பட்டது. இந்த இடம் பொதுமக்களதும், குறிப்பாக சிறுவர்களதும் பொழுபோக்கு மற்றும் ஓய்விடமாகவும் இருந்து வந்துள்ளது.
இந்த பூங்கா யாழ்ப்பாண மாநகரசபையால் பராமரிக்கப்பட்டு வந்தபோதும் யுத்த சூழ்நிலையில் அவ்வாறு பராமரிக்க முடியவில்லை. இப்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் நல்லூர் பகுதி மக்களின் நலனுக்காக இந்தப் பூங்காவினை யாழ்ப்பான மாநகரசபை தொடர்ந்து பராமரிக்க அனுமதிப்பதே நியாயமானதாகும்.
தாங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இக்காணியை வேறு தனி நிறுவனங்களுக்கோ அரச நிறுவனங்களுக்கோ வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுதவும்படி வேண்டுகிறோம். பிரதிகள் யாழ் மாட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகரசபை ஆணையாளர் சரவணபவன் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.