கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிங்களவர்களால் தமிழர்கள் தாக்கப்பட்ட விடயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆலயத்திற்கு நிதி சேகரிக்கச் சென்ற தமிழ் இளைஞர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை கவலையளிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் மாறாக இன முரண்பாடே வலுப்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயம் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடின் பிரச்சினைகள் மேலும் தொடரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலால் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றையதினம் (28) இரவு 7 மணியளவில் 30 ற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஒன்று திரண்டு வீதிகளில் பயணித்தவர்கள் வீடுகளுள் தங்கியிருந்தவர்களென பலரையும் தாக்கியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்களை தடுக்க முற்பட்டவேளை மகன் மற்றும் தந்தை இருவரையும், தாக்குதலில் ஈடுபட்டிருந்த அனைவரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரின் மத்திய பேருந்து நிலையப்பகுதியில் குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் அக்குழுவினரை விரட்டியடித்துள்ளனர். எனினும் எவரும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.