கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேவிபி மாற்றுக்குழுத் தலைவர் பிறேம்குமார் குணரத்தினத்தின் மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாங்கொக் செல்வதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த இவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் இறக்கிச் சென்று தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 15 மணித்தியாலங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த இவர்கள் நேற்றிரவு 7.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து பாங்கொக் நோக்கிப் பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர்களைச் சந்திக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.
எனினும் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதாக ஜேவிபி மாற்றுக்குழுவைச் சேர்ந்த போபகே தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்ற மூவரையும் விடுதலை செய்வதற்கு உதவ அவுஸ்ரேலிய இராஜதந்திரிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தனர். எனினும் அவர்களையும் சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
ஆனாலும் அவுஸ்ரேலிய இராஜதந்திரிகள் குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் இல்லையேல் விடுவிக்குமாறும் திரும்பத் திரும்ப சிறிலங்கா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.
இதையடுத்தே, நேற்றிரவு சம்பா சோமரத்னவும் பிள்ளைகளும் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது பேராதனைப் பல்கலைக்கழக மாணவியாக இருந்த சம்பா சோமரத்ன, ஜேவிபியின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்தார் என்றும், ஆனால் நேற்று தடுத்து வைக்கப்படும் வரை அவரது ஒரு ஒளிப்பட ஆதாரம் கூட சிறிலங்கா புலனாய்வுத்துறையிடம் இருக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே சம்பா சோமரத்ன மூலம், தற்போது தலைமறைவாகியுள்ள பிறேம்குமார் குணரத்தினத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை, பிறேம்குமார் குணரத்தினத்தின மனைவி என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே, சம்பா சோமரத்ன விசாரிக்கப்பட்டதாகவும், அதற்கான போதிய சாட்சியங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாவும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.