குறிகட்டுவான் துறையில் கடந்த ஒருவருட காலமாக வைக்கப்பட்டிருந்த கடற் பாதையைச் சீர் செய்யும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கடற்பாதையைச் சீர்செய்து குறிகட்டுவான் துறைக்கும் நயினாதீவு இறங்கு துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கெனக் கொழும்பில் இருந்து தொழில்நுட்பவியலாளர் குழு ஒன்றும் யாழ்ப்பாணம் வந்தது. இந்தக் குழுவினர் கடற் பாதையைப் பார்வையிட்டு ஆராய்ந்த வேளை அது பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அதைச் சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் தொழில்நுட்பவியலாளர் குழு தெரிவித்தது. இந்தக் கடற்பாதை மோசமாகத் துருப்பிடித்துள்ளமையே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலைத் துறைமுகத்தில் நீண்டகாலமாகப் பராமரிப்பு இன்றிக் காணப்பட்ட இந்தக் கடற்பாதை ஒரு வருடத்துக்கு முன்னரே யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டது. குறிகாட்டுவான் நயினாதீவு இடையே சேவையில் ஈடுபடுத்து வதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தக் கடற்பாதை குறிகாட்டுவான் இறங்கு துறையிலும் ஒரு வருடமாகக் காத்துக் கிடந்தது.
எனினும் அது பயன் படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையால் கடற்பாதைச் சேவை கைவிடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிகாட்டுவான் துறைக்கும் நயினாதீவுக்கும் இடையில் கடற்பாதைச் சேவை ஜனவரியில் ஆரம்பமாகும் என அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தி ருந்தனர்.
இந்தக் கடற்பாதை மூலம் நயினாதீவுக்கு வாகனங்கள் மற்றும் பொருள்களை இலகுவாகக் கொண்டு செல்ல முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் கடற்பாதைச் சேவை கைவிடப்பட்டுள்ளமையால் அந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.