பக்கங்கள்

22 ஜனவரி 2012

கூட்டமைப்புடனான சந்திப்பை தடுக்க கிருஷ்ணாவை மாட்டுப்பொங்கலுக்கு அழைத்தார் மகிந்தா!

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் ‘சிக்க‘ வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 16ம் நாள் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பொங்கல்விழாவில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதால், அதன்பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் சந்திப்பதை தடுக்கவே அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே, தைப்பொங்கலை இம்முறை அலரி மாளிகையில் ஒரு நாள் பிந்தி -16ம் நாள் கொண்டாடுவதற்கு தெரிவு செய்திருந்தார் சிறிலங்கா அதிபர்.
தைப்பொங்கல் கடந்த 15ம் நாள் கொண்டாடப்பட்ட போதும், மறுநாள் தான் அலரி மாளிகையில் கொண்டாடப்பட்டது.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் அன்றைய நாளை மாட்டுப் பொங்கலாகவே கொண்டாடுவர். அதுவும் மாலையிலேயே மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா 16ம் நாள்- மாட்டுப்பொங்கல் நாளன்று- பிற்பகலில் கொழும்பு வருவதாலேயே அன்று அலரி மாளிகையில் பொங்கல் விழாவைக் கொண்டாட முடிவு செய்திருந்தார் மகிந்த ராஜபக்ச.
ஆனால் அதுபற்றி எஸ்.எம்.கிருஸ்ணா அறிந்திருக்கவில்லை. அவர் முதலாவது சந்திப்பை தாஜ் சமுத்ரா விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவே திட்டமிட்டிருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தான் அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு குறித்து கிருஸ்ணாவிடம் தகவல் தெரிவித்த சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் பீரிஸ் அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இந்திய விமானப்படை ஜெட் விமானத்தில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய எஸ்.எம்.கிருஸ்ணா உடனடியாக சிறிலங்கா விமானப்படை உலஞங்குவானூர்தியில் தாஜ் சமுத்ரா விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அவரை அலரி மாளிகைப் பொங்கல் விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரையும் காணவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தான் அதிகம் இருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா அதிபரின் பொங்கல் விழா அழைப்புக் கூட அனுப்பப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவின் கண்களில் முதலில் பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சிறிலங்கா அதிபர் அலரி மாளிகையில் மாட்டுப்பொங்கல் நடத்தியதாக கொழும்பு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.