பக்கங்கள்

16 ஜனவரி 2012

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை த.தே.கூட்டமைப்பு நிராகரித்தது.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பாக அணைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நேற்று 100 பக்கங்களில் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முன்னுரையில்,
" இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைகளை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
இந்த நாட்டின் அங்கங்களான மக்கள் மீது தண்டனை எதுவுமே வழங்கப்படாமல் தாராளமாயும் குறிப்பானதாயும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளையும், இத்தகைய வன்முறைகளை நெறிப்படுத்தி, அனுசரணை வழங்கி அல்லது அதை திட்டமிட்டு மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கு உள்ள பங்கினையும் பற்றி ஆற்றொணாத் துயருற்றுள்ளோம்.
சுய ஆட்சி, மாண்பு மற்றும் முழுமையும் சமத்துவ மகிழ்வும் கொண்ட குடியுரிமை போன்ற தமிழர்களின் மறுக்க இயலாத உரிமைகள் பற்றிய கோரிக்கையானது இப்படியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தீர்வுகளற்ற வன்முறைகளால் வலிவூட்டம் பெற்றுள்ளது.
பல தசாப்த காலமாகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்வற்று நெரித்து வந்த வன்முறைகளால்  கதிகலங்கிப் போன தமிழ் வாலிபர்கள் அரசுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை எழுச்சிகள் இறுதியிலே பல்வேறு காரணங்களுக்காகக் குடியியல் யுத்தமாக முடிவுற்றமையை மனதிலே வரிந்து கொண்டுள்ளது.
இந்த நாட்டைப் பீடித்துள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நிலைநிற்கத்தக்கதும் நியாயமுமான தீர்வானது தமிழ் பேசும் மக்களின்,  குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் மீள் செப்பனிடப்பட்ட திட நம்பிக்கை மீது கட்டப்பெற்றதாய்,  இலங்கை அரசுடனான அந்த மக்களின் உறவினை மீள் சீர்பொருந்துவதாக அமைய வேண்டும்.
இந்த நாட்டின் கூறுகளாக அமையப்பெற்ற அனைத்து மக்களும் சமத்துவ அந்தஸ்தையும், அரசாட்சிக்கான அடைவு வழியையும், சந்தர்ப்பத்தையும், நீதிக்கும் மாண்புக்குமான அடைவு வழியையும் பெற்றடைவதைத் தரிசனமாகக் கொண்ட ஒரு எதிர்காலத்தை நோக்கியவர்களாய் உள்ளோம்.
2009 இன் இறுதி யுத்தக் கட்டங்களிலே இடம்பெற்ற அரச இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் மற்றும் குறிப்பாக தமிழ் குடிமக்கள் ஆகியோரின் வாழ்வுகளில் ஏற்பட்ட பெரும் இழப்பையிட்டுப் பெரும் துயருற்றவர்களாய் உள்ளோம்.
குடியியல் யுத்தக் காலத்திலே பிரசன்னமாகியிருந்த பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால், இந்த நாட்டிற்குள்ளும் அதற்கு வெளியேயும் இருந்த இலங்கையின் குடிமக்களுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஆகியவைகள் பற்றிய கண்டனத்தையும் வெளியிட்டுள்ளோம்.
இலங்கை அரசின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது வன்னித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவானது இலங்கையின் கணக்கொப்புவிப்பு பற்றி வெளியிட்ட கண்டுபிடிப்புகளை மீள்வலியுறுத்தி நிரந்தரமான அரசியற்தீர்வை முன்வைக்கும் அரசின் மீது தமிழ்மக்களின் நம்பிக்கையினை மீள்சீரமைப்பதற்கு, படுமோசமான அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான கணக்கொப்புவிப்பானது நேர்மையான நல்லிணக்கத்துக்கான செயன்முறைக்கு அவசியமான ஒரு முன்நிபந்தனையாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, உண்மையை வலியுறுத்துவதை நோக்காக் கொண்டு நெறிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நடப்பித்து,  அவர்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்குவது நேர்மையான நல்லிணக்கத்துக்கான நடைமுறையாகும்.
யுத்த குற்றங்களையும் இதர மனித உரிமைகள் மீறல்களையும் கொல்லப்படுமளவுக்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய சகல கணக்கொப்பு விடயங்களையும் பற்றி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது கவனத்திற்கொள்ளும் என இலங்கை அரசானது உலகுக்கு வழங்கி வந்த உறுதியை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
மோசமான சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அரசுகள் கருத்திற்கொள்ள இயலாதிருக்கும் பட்சத்திலே பிரயோகிக்கப்படக் கூடிய குறைநிரப்புக் கொள்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்வுகள் ஆகியவைகள் பற்றி அறிந்துள்ளோம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் திட நம்பிக்கையை மீளவும் பெற்றிருக்கக் கூடியதான போதியதும் நம்பகத்தன்மை கொண்டதுமான நல்லிணக்கத்தைக் கண்டடைவையும் அமைப்பியக்கம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டுள்ளமை பற்றி மனக்கசப்படைந்தவர்களாய் உள்ளோம்.
கணக்கொப்புவிப்பு தொடர்பானதாக எதுவுமே இல்லாவிட்டாலுங் கூட,  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில நேரிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரித்து, அதன் பரிந்துரைகள் அனைத்தையும் திரட்டினாலுங் கூட, இலங்கையின் கணக்கொப்புவிப்பினை முன்னெடுப்பதிலே அவை குறைவுபட்டவை என்பதைக் குறிப்பிட்டு கூறுகின்றோம்.
அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தும் உளச்சுத்தியான முன்னெடுப்புகள் அனைத்துக்குமே எவ்வித பாரபட்சமுமின்றி ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது குறிப்பிட்ட காரணங்களின் நிமித்தமாகக் கொண்டுள்ள முடிவு யாதெனில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக்கூறும் முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்ளவில்லை.
அத்துடன் மோசமான யுத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதனுடன் தொடர்புபட்ட ஆயுதப் படையினர் மற்றும் குடியியற் பணியாளர் ஆகியோரை வேலியடைத்து பாதுகாக்கவே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறும்  விடயம் தொடர்பாக கருத்திற் கொள்வதற்கோ அல்லது அதனை அங்கீகரிப்பதற்கோ இலங்கை அரசு விரும்பில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக பகுப்பாய்வு செய்த பின்னர் டிசெம்பர் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிட்ட ஆரம்பப் பதிலீட்டை மீள்வலியுறுத்தியே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது“ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.