வன்னியில் நடந்த இறுதிப் போரால் பாதிக்கப்பட்ட பின்னர் குடாநாட்டில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட இருந்த சைக்கிள்களை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி தமது ஆதரவாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது.யாழ். மாவட்டத்துக்கு 1,500 சைக்கிள்களை இந்தியா வழங்க இருந் தது. சைக்கிள்களைப் பெறும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகத் தயாரிக்கப்பட்டன. அவற்றை விநியோகிக்கும் பொறுப்பு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
பயனாளிகளின் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் அதனை மீளாய்வு செய்தது. பட்டியலில் இருந்த பெரும் பாலானவர்கள் பயனாளிகளுக்குரிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதை அது கண்டறிந்தது.
அது குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அந்தப் பெயர்ப்பட்டியல் உடனடியாக நிறுத்தப்பட்டது. புதிய, திருத்திய, சரியான பட்டியலைத் தயாரிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து விசாரித்ததில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் பிரதேசக் கிளைகளால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலே சமூக சேவைகள் அலுவலர்கள் மூலமாக முன்னர் பிரதேச செயலர்களுக்குத் தரப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்தது.
இருப்பினும், பட்டியலில் ஏற்பட்ட தவறு குறித்து யாழ். செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள் எதுவும் கூறவில்லை. சமூக சேவைகள் அலுவலர்கள் தந்த பட்டியலையே தாம் வழங்கினர் என்று குறிப்பிட்டனர். இந்தப் பதிலுக்காக அரச அதிபர் அவர்களைக் கடிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸின் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்களில் பெரும்பாலானவை அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உறவினர்களுடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமது உதவிகள் அமைச்சர் டக்ளஸ் சார்ந்தவர்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விடயம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்திருக்கிறது.
இதேவேளை, திருத்திய புதிய பட்டியலின் அடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சைக்கிள்களைப் பயனாளிகளிடம் கையளிப்பார். யாழ். மாவட்டத்துக்கு இந்தியா 2,000 சைக்கிள்களை ஒதுக்கி இருந்தபோதும் அவற்றில் 500 சைக்கிள்கள் ஏற்கனவே மணலாறு பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதற்காக ஆளுநரால் ஒதுக்கப்பட்டுவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.