இலங்கை அரசாங்கத்தின் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை எனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘எந்தவொரு சிவில் யுத்தத்திலும் பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பொதுமக்களின் பூச்சிய இழப்புக் கொள்கையில் அரசாங்கம் தெளிவாக இருந்தது’ என அவர் கூறினார்.
‘இக்கொள்கையின் காரணமாக, யுத்தத்தின்போது பொதுமக்கள் இழப்பு குறைவாக இருந்தது. எந்த யுத்தத்திலும், குறிப்பாக மனிதக் கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்படும்போது இழப்புகள் ஏற்படும். பொதுமக்கள் இழப்பை குறைப்பதும் மனித உயிர்களை பாதுகாப்பதும் யுத்தத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரதான நோக்கமாக இருந்தது’ என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு குழுக்களினால் தெரிவிக்கப்படும் எண்ணிக்கைகள் ஆதாரமற்றவை என அவர் கூறினார். சந்தேகம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இழப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு நாம் பிரிவொன்றை நியமித்தோம். அக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. அவர்கள் இறுதி அறிக்கையை தயாரிக்கிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்’ என அவர் தெரிவித்தார்.
எனினும் இக்கணக்கெடுப்பில் இயற்கையாக இறந்தோர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டோர், எல்.ரி.ரி.ஈ.யினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டோர், புலிகளின் அங்கத்தவர்கள், விபத்துகளினால் இறந்தவர்கள், நாட்டைவிட்டு சட்டவிரோதமாக தப்பியோடியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை. ஏனைய எண்ணிக்கைக்கு மாத்திரமே இராணுவம் பொறுப்பேற்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.