பக்கங்கள்

23 ஜனவரி 2012

ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் ஜெனீவாவில் ஆலோசனை.

அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக, கடந்தவாரம் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் பங்கேற்ற, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் அனைத்துலக விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் மற்று்ம் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு வழங்குவோர் மத்தியில் இவர் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரை அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்தே இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பெர்லெய்ன், கனேடிய நிரந்தரப் பிரதிநிதி எலிசா கொல்பேர்க், பிரித்தானிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் கொடஹாம், நோர்வேஜிய நிரந்தரப் பிரதிநிதி ஸ்டீபன் கொங்ஸ்ராட், பிரான்ஸ் நிரந்தரப் பிரதிநிதி ஜீன்-பப்ஸ்ரி மத்தி, ஜேர்மனின் நிரந்தரப் பிரதிநிதி ஹான்ஸ் சூமேச்சர், அவுஸ்ரேலிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் வூல்கொட், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மேரிஅஞ்சலா சப்பியா, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகப் பிரதிநிதி றொரி மொங்ரோவன், அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்ரர், ஆசிய அமைப்பின் பிரதிநிதி பூஜா பட்டேல், மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி பிலிப்பி டாம், அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி அலெக்ஸ் கொன்டே, அனைத்துலக வேல்ட் விசன் பிரதிநிதி பெரிஸ் கைன் ஆகியோர் இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.