ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.
ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை தூக்கில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.
இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.
இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வைகோவுக்காக ஆஜரானேன்-நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: ஜேத்மலானி
நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்குப் பி்ன்னர் வெளியே வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் இங்கு நிற்க முதல் காரணம் வைகோதான். அவர் எனது நெருங்கிய நண்பர். அவருக்காகத்தான் வந்தேன். இன்று இங்கு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நிச்சயம் நீதி சாகாது என்றார் ராம்ஜேத்மலானி.
ஜேத்மலானியால்தான் இது முடிந்தது-வைகோ:
வழக்கறிஞர் உடையில் வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் ராம்ஜேத்மலானிதான். அவருடைய திறமையான வாதத்தால்தான் இன்று இந்த இடைக்கலாத் தடையை பெற முடிந்தது. நிச்சயம் வெல்வோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.