பக்கங்கள்

27 ஆகஸ்ட் 2011

முன்னாள் நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற நீதவான்கள் சிலர், சரத் என் சில்வாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
சரத் என் சில்வா, பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலப்பகுதியில் தாம் பழிவாங்கப்பட்டதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதவான்கள் மகிந்தவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் என் சில்வா பதவி வகித்த காலத்தில், நியாயமற்ற முறையில் தமக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதவான்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும்,மஹிந்த ராஜபக்ஷவையும் அண்மைக்காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு அதீதமான நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.யினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இணைய தள ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக சரத் என் சில்வா கலந்துகொண்டார்.
சரத் என் சில்வாவின் அழுத்தம் காரணமாக 42 நீதவான்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டாய ஒய்வு வழங்கியதனால் ஏற்பட்ட மன உலைச்சலை தாங்கிக் கொள்ள முடியாது சில நீதவான்கள் தற்கொலை செய்து கொண்டதாக மகிந்தவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலர் தொடர்ந்தும் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1999 – 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நீதிமன்றத்துறை நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஓய்வு பெற்ற நீதவான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து சிங்கள ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.