இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்தும் திங்கட் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன் மற்றும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் தண்டனைக் குறைப்பினால் ஆயுட் தண்டனை பெற்ற நளினி தம்பதிகளுக்கு சிறையில் பிறந்த மகள் ஹரித்ரா முருகன், இந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனுச் செய்துள்ளார்.
தனது தந்தையை விடுவிக்காவிட்டாலும் அவரின் தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். தற்போது லண்டனில் மருத்துவப் படிப்புக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஹரித்ரா முருகன், தனது பெற்றோருடன் கடிதம் மூலமாகவே தொடர்புகளை பல ஆண்டுகளாக பேணி வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது பெற்றோரை பார்க்கவில்லை என்றும் தற்போது இந்தியா செல்ல வீசா அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.