சென்னை “தென்செய்தி’ அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் 18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலாளர் வி. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா. செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.ராசீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதைக் கண்டு இக்கூட்டம் வருந்துகிறது. இம்மூவரின் உயிர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை இக்குழுவின் சார்பில் சந்தித்து வேண்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
2.மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 22-8-11, திங்கள் கிழமை அன்று மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் 26-8-11 வெள்ளிக் கிழமை அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
4.மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் அவர்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.
இப்படிக்கு
பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
3 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.