பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2011

வவுனியாவில் மக்களிடம் சிக்கிய மர்ம மனிதர்கள்!

வவுனியா சூடுவெந்த பிலவில் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மூன்றுபேரும், இராணுவத்தினரே என்று ஊர் மக்களும், அவர்கள் உலுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் என்று பொலிசாரும் தெரிவித்திருக்கின்றனர்.
பதட்டமான ஒரு சூழ்நிலையில் நேற்றிரவு பொதுமக்களின் பிடியில் இருந்து பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்ட இவர்கள் மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
நேற்றைய இந்தச் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ற் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிப்பதற்காக இரவு வேளையில் சென்றதாகக் கூறப்படுகின்ற இந்த மூவரின் நடவடிக்கைகள் குறித்து ஊர்மக்கள் சந்தேகம் கொண்டதையடுத்தே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மூவரும் வேறு சிலரும் எட்டு மோட்டார் சைக்கிள்களில் (அவற்றில் ஒன்று இலக்கத்தகடு இல்லாதது) என்ன நோக்கத்திற்காக ஊருக்குள் இரவு வேளையில் வந்தார்கள் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இவர்கள் மீன்பிடிப்பதற்காகவே சென்றார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டதையடுத்தே, ஊர் மக்கள் அவர்கள் மூவரையும் பொலிசாரிடம் நேற்றிரவு கையளித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து எவரும் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.