ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும் பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம்.
‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ. ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம்.
‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக் போஸ்டை ராணுவம் அமைத்திருக்கிறது.அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. சுமார் இரண்டு லட்சம் ராணுவ வீரர்கள் இன்னமும் போருக்குத் தயாரான நிலையிலேயே காணப்படுகின்றனர். ஆனையிறவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல இடங்களில் சிங்கள ராணுவம் போர் நினைவுச் சின்னங்களை அமைத்து, சுற்றுலாத் தலமாக மாற்றியிருக்கிறது. அவர்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழ்வது வாய்ப்பில்லை.
வல்வெட்டித் துறையில் பிரபாகரனின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது சிங்கள ராணுவம்.ஈழத்தின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் நான்கு பேர் கூடிநின்று பேசக்கூட பயப்படுகிறார்கள். தங்களின் துயரங்களைப் பேசி என்ன ஆகப்போகிறது என்ற ஆதங்கத்தையும் என்னிடம் பேசிய தமிழர்களிடம் பார்த்தேன். அவர்களின் ஆழ் மனதில் சிங்கள மற்றும் இந்திய எதிர்ப்பு இழையோடுவதைக் காண முடிந்தது’’ என்று சொன்ன பிரிட்டோ அங்குள்ள பெண்கள் குறித்தும் வேதனையோடு பேசினார்.
‘‘ஈழத்தில் ஜீரணிக்கவே முடியாதது தமிழ்ப் பெண்களின் நிலைதான். எந்த ஊருக்குச் சென்றாலும் பாதிப் பெண்களாவது அங்கு விதவைகளாய் இருக்கிறார்கள்.இளை ஞர்களைக் காணவே முடியவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அல்லப்பெட்டி கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த கிராமத்தில் மட்டும் 70 இளைஞர்களைக் காணவில்லை என்றார்கள் மக்கள்.
போரில் பெரும்பாலான ஆண்கள் கொல்லப்பட்டு விட,அவர்களின் மனைவிகள் சிறு குழந்தைகளோடு பெரும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். சிங்கள அரசு கணக்கெடுப்பின்படி 89 ஆயிரம் இளம் விதவைகள் ஈழத்தில் இருப்பதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் பேரும், திரிகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் 49 ஆயிரம் பேரும் இளம் விதவைகள் என அந்தச் செய்தி சொல் கிறது.
அதில் எட்டாயிரம் பேர் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்கிற புள்ளி விவரத்தையும் அரசே கொடுத்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைப் பெண்கள் இருக்கிறார்கள் என உறுதியாக சொல்ல முடியும்.என்னுடைய பயணத்தில் பல்வேறு இடங்களில் அந்தப் பெண்களை சந்தித்துப் பேசினேன்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 33 வயது விதவை கயல்விழி, 2006-ம் ஆண்டு தனது கணவர், மகன், மகள் ஆகியோருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். தி டீரென அங்கு வந்த சிங்கள ராணுவத்தினர், எதுவும் விசாரிக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளை சுட்டுக் கொன்றிருக் கிறார்கள். ‘எனக்கு அதிர்ச்சியில் என்ன பண்றதுன்னே தெரியலை. கடலில் விழுந்து செத்துப் போயிடலாம் என்று நினைத்தேன். என் மகனைக் கொல்ல மனம் வரலை. நானும் இறந்து போனா அவனை யாரு வளர்க்கிறது. அதனால் உயிர் வாழறேன்’ என்று அந்தப் பெண் கதறி அழுதபோது என்னால் ஒரு ஆறுதலும் சொல்ல முடியவில்லை.
அழுக்கு உடல், கிழிந்த உடை, ஒட்டிய வயிறுடன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த கயல்விழியின் ஒன்பது வயது மகன் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாக தொலைந்து போயிருந்தது’’ என்று கண்கலங்குகிறார் பிரிட்டோ.
சற்று நிதானித்து தொடர்ந்தார். ‘‘38 வயதில் இன்னொரு பெண்ணைப் பார்த்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், அவரது கணவரையும், மகனையும் சிங்கள ராணுவம் பிடித்துக் கொண்டு போய்விட்டதாம். இன்றுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூலி வேலை பார்த்து பண த்தை சேமித்து கொழும்பு, வெளிக்கடை என்று ஒவ்வொரு சிறைச்சாலையாய் போய்த் தேடுவதும், மீண்டும் வந்து வேலை செய்வதும், மீண்டும் தேடுவதும் என தொடர்கிறது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. சிங்களம் தெரியாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ‘போருக்குப் பிறகு கூலி வேலை கூட சரியாக கிடைக்காததால் சிறைச்சாலைகளுக்குச் சென்று தேடக்கூட பணமில்லையே’ எனக் கதறினார் அந்தப் பெண்.
இருபத்தைந்து வயது இளம்பெண் யாழினி. கணவரையும் மகனையும் ராணுவம் காவு வாங்கி விட, போகிற வருகிற அனைவரிடமும், இருவரின் போட்டோக்களையும் வைத்துக்கொண்டு ‘இதுதான் எனது கணவர், இதுதான் எனது மகன்.எங்கேயும் பார்த்தீர்களா’ என்று அரைப்பைத்தியமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார். இருவரும் இறந்து விட்டார்கள் என்பதைக் கூட அந்தப் பெண்ணால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
குடும்பத்தில் அனைவரையும் இழந்து வயதான பெண்கள் அனுபவிக்கும் கொடுமையும் எளிதாக சொல்லிவிட முடியாது. அறுபது வயதுப் பெண் அவர். கடைசிகட்ட யுத் தத்தின்போது புலிகளின் அழைப்பை ஏற்று கிளிநொச்சியிலிருந்து தனது கணவர், மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் புறப்பட்டிருக்கிறார். ‘பரந்தனை என்கிற இடத்தை அடைந்தபோது நான் மட்டும்தான் மிஞ்சினேன்’என்று கதறி அழுத அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை.
ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பிறந்த பெண்கள், இனக்கலப்புக்காக கட்டாயமாக கருவுற வற்புறுத்தப்பட்ட பெண்களையும் கூட சந்தி த்தேன்.
தனக்கு நேர்ந்த இழப்புகளை தாங்கிக் கொண்டு உயிரோடு இருப்பவர்களையாவது காப்பாற்றுவோம் என்றால் அதற்கும் அந்தப் பெண்களுக்கு அங்கு வழியில்லை. பாதிக்கப்பட்டோர் மறுவாழ்விற்கான எந்தப் பணிகளையும் இலங்கை அரசு செய்யாததால் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
எனவே, இளம்பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, அங்கு ரோடு போடுவதற்காக வந்திருக்கும் சீனர்களும், கொரியர்களும் இந்தப் பெண்களை தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவிர, பல விதவைப் பெண்களைக் குறிவைக்கும் புரோக்கர்கள் அவர்களுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றி கொழும்புவிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் தள்ளுவதை தமிழ் அரசியல்வாதிகளே என் னிடம் பேசி வருத்தப்பட்டார்கள்.
உலகுக்கே கலாசாரத்தைச் சொன்ன தமிழர்கள் ராஜபக்ஷே என்கிற கொடுங்கோலனால் பெரும் கலாசார சீரழிவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். எல்லா விதவைப் பெண் களுமே தொழில் ஏதுமின்றி, வாழ வழியின்றி விரக்தியான மனநிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது நல்ல கவுன்சலிங் தேவை. அதற்கு பன்னாட்டு தொண்டு நிறுவனங்களையாவது இலங்கை அரசு அனுமதிக்கலாம்’’ என்று இயலாமையோடும், வேதனையோடும் சொல்லி முடித்தார் பிரிட்டோ.
ஈழத்தமிழர்களின் கனவான தனி ஈழம் விரைவில் சாத்தியமாகலாம். தெற்கு சூடான் அந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால் அமையப் போகும் ஈழத்தில் வாழ்வதற்கு அந்த மக்கள் உயிரோடு இருப்பது இன்னமும் அவசியம் இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.