பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2011

யாழ்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறைப்பிற்கு சரத் என் சில்வா எதிர்ப்பு.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் நடவடிக்கைக்கு முன்னாள் நிதியரசர் சரத் என் சில்வா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 98(9) சரத்திற்கு அமைய இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற போதிலும் அதற்காக சில நிபந்தனைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் நிலுவையில் இருந்தால் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இல்லாத நிலையில் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது எனவும், அது நிலையான சமாதானத்தை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தீர்மானங்கள் இனப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர் மக்கள் இன்னமும் சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், யுத்தத்தில் இடம்பெயர்ந்த பலர் இன்னமும் நாடு திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு இது தடையாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென சிவில் அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.