பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2011

லெய்டன் அவர்களுக்கு தமிழ் மக்களின் இறுதி வணக்கம்.

இடம்: ரொரன்ரோ மாநகரசபைச் சதுக்கம் (Nathan Phillips Square, 100 Queen Street West, Toronto, Ontario) காலம்: வெள்ளிக்கிழமை August 26, பிற்பகல் 6 மணி தொடக்கம் 8 மணிவரை.
கனடாவின் ஒரு தலைசிறந்த குடிமகனாகவும், ஒரு தூய்மையான அரசியல்வாதியாகவும், கனடியத் தமிழரின் உற்ற தோழனாகவும் விளங்கிய புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் திரு யக் லெய்டன் அவர்களின் இழப்பு நம் அனைவரையும் ஆளாத் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னால் சிறி லங்காவில் போர் மிக முனைப்போடு நடந்த காலகட்டத்திலே, கனடியத் தமிழர்; போர் நிறுத்தத்தை வேண்டி இலட்சக் கணக்கிலே திரண்ட காலப்பகுதியில் பல்வேறு தேசியத் தலைவர்கள் எமக்கு குரல் கொடுக்காமல் நழுவிச் சென்றபோது, அமரர் உயர்திரு யக் லெய்டன் அவர்கள் தமிழரின் துயர்களிலே தானும் ஒருவராகக் கலந்து கொண்டு போர் நிறுத்தத்துக்காகக் குரல் எழுப்பியதை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அக் காலகட்டத்திலே கனடியப் பாரளுமான்றத்திலே ஈழத்தமிழர் குறித்த பிரச்சனைக்காக ஒரு விவாதத்தை முன்மொழிந்து நடத்திய பெருந்தகை அவர். அது மட்டுமல்ல, போர் முடிவுக்கு வந்த பின்னர் ஈழத் தமிழரின் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும், அவர்களுக்குசி சரியாதொரு அரசியற் தீர்வு வழங்கப்பட வேண்டும், சிறி லங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வதேச விசாரணைக்குழு மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது இறுதி மூச்சு வரை குரல் கொடுத்தவர் அமரர் யக் லெய்டன் அவர்கள். தமிழர் சமூக நிகழ்வுகளில் பங்குகொள்வதை பெருமையுடனும், பெருமகிழ்வுடனும் ஏற்றுக் கொண்ட தமிழர்களின் உற்ற தோழன் அவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கனடியப் பாராளுமன்றத்திலே கனடியத் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று எம் சமூகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுத்தி இறுதியாக செல்வி. ராதிகா சிற்சபைஈசனின் பாராளுமன்றப் பிரவேசத்தின் மூலம் எம் சமூகத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளை நிதர்சனமாக்கிய பெருமையும் அமரர் ஐக் லெய்டனையே சாரும். தன் வார்தைகளே தன் செயல்கள் என்பதை இதன் மூலம் கனடியத் தமிழருக்கும் கனடாவுக்கும் புரிய வைத்தார். உயர்திரு. லெய்டனின் அறிவு, ஊக்குவிப்பு, பண்பான ஆலோசனைகளால் கனடிய தமிழர் சமூகம் அடைந்த பலன்கள் அளப்பெரியவை. இவ்வாறு கனடியத் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட அமரர் உயர்திரு யக் லெய்டன் அவர்களுக்கு மாபெரும் அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 6 மணிக்கு நேத்தன் பிலிப் சதுக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் திரளும்படி கனடியத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் கனடியத் தமிழர் சமூகம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. அவர் நமக்காற்றிய அளப்பரும் சேவைகளை நன்றியோடு நினைவு கூரவும் நம் ஒற்றுமையின் பலத்தை மீண்டுமொருமுறை வெளிக்காட்டவும் இந் நிகழ்வில் ஒன்று கூடுவோம். 'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.' என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய அமரர் உயர்திரு. யக் லெய்டனின் அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கில் கூடிடுவோம். வடஅமெரிக்கக் கண்டத்தில் முத்தெனத் தோன்றிய அமரர் ஜக்லெய்டனைப் போற்றிடுவோம். தொடர்புகளுக்குகனடிய தமிழர் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.