பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2011

நெடுங்கேணியில் மக்களிடமிருந்து மர்மமனிதர்களை மீட்டுச்சென்ற படைகள்.

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் வன்முறையில் ஈடுபடச் சென்ற மர்ம மனிதர்களை இராணுவ வாகனம் கிராம இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றி ஏற்றிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணிப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதர்களை யாரும் கண்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று இராணுவத்தினர் தொடர் அறிவிப்புக்களை ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்து வருகின்றனர். இந்த அறிவித்தலை அடுத்து அந்தப் பகுதி இளைஞர்கள் உசார் நிலையில் தமது கிராமத்தினைக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த இரவு 8.30 மணியளவில் மர்ம மனிதர்கள் அறுவர் அந்தக் கிராமத்தில் ஊடுருவிய தகவல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தினைச் சுற்றிவளைத்திருக்கின்றனர்.
சுற்றிவளைப்பு இடம்பெற்றவுடன் இராணுவத்தினரின் வாகனம் அந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், அங்கு வந்திருப்பவர்கள் குடிபோதையில் இடம்மாறி அங்கு வந்திருப்பதாகவும், அவர்களைத் தாம் கவனிப்பதாகவும் தெரிவித்து மர்ம மனிதர்களை ஏற்றிச் சென்றதாக பட்டிக்குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பகுதியில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லாத நிலையில் மர்ம மனிதர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்க யார்? தகவல் வழங்கியிருக்க முடியும்? மர்ம மனிதர்களாக வந்தவர்களே இராணுவத்தினரை அழைத்திருக்கலாம் என்று அந்தக் கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
போராலும், சிங்கள மக்களின் வன்முறைகளாலும் நெடுங்கேணியின் எல்லைக்கிராமமான பட்டிக்குடியிருப்பு கிராம மக்கள் பல தடவைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.