ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு அமெரிக்கா பொறி வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா தகவல் அனுப்பியிருந்தது.
ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு இன்னமும் எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்த விவாதம் நடத்தப்பட்டால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, சனல் 4 வெளியிட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் உள்ளிட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உறுப்புநாடுகள் கலந்துரையாடும் நிலை ஏற்படும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முந்திய கூட்டத் தொடர்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்குமாறு, சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கூறிவந்தனர்.
இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் விவாதிப்பது பற்றி அமெரிக்கா எழுப்பியுள்ள கேள்விக்கு சிறிலங்கா அரசு இன்னமும் பதில் அனுப்பவில்லை.
செப்ரெம்பர் 20 நாள் மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரை சிறலங்காவின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கும்.
இன்னமும் ஆறு வாரங்களில் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும்.
சிறிலங்கா அரசாங்கம் அதற்குள் பதிலளிக்காது போனால், அமெரிக்கா தலைமையிலான அணி அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான வேறொரு தீர்மானத்தை கொண்டு வரவள்ளதாக ஜெனிவாவிலும், வொசிங்டனிலும் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு எச்சரித்துள்ளனர்.
அந்தத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் சிறிலங்காவுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அந்தத் தீர்மானத்தின் வடிவம், உள்ளடக்கம் குறித்து தமக்குத் தெரியாது என்றும் அந்த இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுவதாகவும், பொருளாதாரத்தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை உள்ளடக்கியதாகவும் அந்தத் தீர்மானம் அமையலாம் என்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதியாக இருப்பதாக அறியமுடிவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த விவகாரத்தை எதிர்கொண்டு முறியடிப்பதற்கான மூலோபாயம் இல்லாத நிலையில் சிறிலங்கா அச்சமடைந்துள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.