யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபகருமான எனது நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இந்த நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எத்தனை பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொண்டு ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
2006 ஆம் வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான நடராஜா ரவிராஜின் நினைவு தினம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மனோ கணேசன் அறிக்கையில் மேலும், தலைநகரிலும், ஏனைய அரசக்கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் தினசரி 10 பேர்வரை தமிழர்கள வெள்ளைவான் நபர்களினால் கடத்தப்பட்டு, காணாமல் போய்கொண்டிருந்த கால கட்டத்தில் மக்கள் கண்காணிப்புக்குழுவை நானும், ரவிராஜூம், சிறிதுங்க ஜயசூரியவும் இணைந்து 2006 செப்டெம்பர் மாதம் 19ம் திகதி உருவாக்கியிருந்தோம். எமது குழு உருவாக்கப்பட்டு 50 நாட்களில் எனது நண்பர் ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்ட பின்பு மக்கள் கண்காணிப்புக்குழுவை கலைத்துவிடும்படி எனக்கும், சிறிதுங்கவிற்கும் பாரிய பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன மூன்று முறை படுகொலை முயற்சிகளிலிருந்து நான் தப்பியிருந்தேன். ஆனால் நாங்கள் கொலை அச்சுறுத்தல்களுக்கு பணிந்து மக்கள் கண்காணிப்புக்குழுவை கலைத்துவிடவில்லை அதன் மூலம் தனது உயிரை அர்ப்பணித்த நடராஜா ரவிராஜிற்கு நாம் துரோகம் இழைக்கவில்லை.
மாறாக தொடர்ந்த எமது செயற்பாட்டின் மூலமாக தலைநகரிலும், நாடு முழுக்கவும் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடத்தல், படுகொலை, கப்பம், வகைதொகையற்ற கைது ஆகிய பாரிய மனித உரிமை மீறல்களை உலகறிய செய்தோம். அதனால் இத்தகைய துன்பகரமான நிகழ்வுகள் மூலமாக தங்களது இன்னுயிரை இழக்கும் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை எங்களால் காப்பாற்ற முடிந்தது.
இத்தகைய ஒரு நேர்மையுடன் கூடிய உறுதியும், துணிச்சலும் மிக்கவொரு தலைமையை தந்தவர் நண்பர் நடராஜா ரவிராஜ். அவரது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மக்கள் கண்காணிப்புக்குழு இன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.
இது மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஸ்தாபகர் என்ற முறையிலும், எனது நண்பர் என்ற முறையிலும், நடராஜா ரவிராஜிற்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும். அவரது தியாகம் வீண்போகவில்லை என்பதை நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் நண்பர் ரவிராஜின் இலட்சியங்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். என சூளுரைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.