பக்கங்கள்

12 நவம்பர் 2010

கணவரைப்பற்றி அறிந்து சொல்லுங்கள்,விஜிதனின் மனைவி வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் பா. நடேசனுக்கு அடுத்ததாக உயர் பதவியில் இருந்தவர் எனது கணவர் சிவசிதம்பரபிள்ளை ரவிச்சந்திரன் அல்லது விஜிதன். கடந்த வருடம் மே-18 ஆம் திகதி இராணுவத்திடம் சரண் அடைந்த இவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் உள்ளது.”
இவ்வாறு சிதம்பரபிள்ளை ரவிச்சந்திரனின் மனைவி யாழ்.வட்டுக்கோட்டையில் வைத்து தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று சாட்சியம் வழங்கினார். ”எனது கணவரை தேடி நான் அலையாத இடமே தற்போது இல்லை. கணவர் உட்பட புலி முக்கியஸ்தர்களை இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது என்று அவரை நான் தேடிச் சென்ற பல இடங்களிலும் கூறி இருக்கின்றார்கள்.
ஆனால் எனது கணவர் கடந்த வருடம் மே-18 ஆம் திகதி இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தார் என்பது உறுதி. எனது தம்பி இதற்கு கண் கண்ட சாட்சி. எனது தம்பி முன்னிலையிலேயே கணவர் சரண் அடைந்து இருந்தார்.
எனக்கு இரு பெண் பிள்ளைகள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் மிகவும் தடுமாறிப் போய் உள்ளேன். கணவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பது தெரியாமல் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனது கணவர் பற்றிய தகவல்களை நீங்கள்தான் அறிந்து சொல்ல வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.