யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலுள்ள எங்களுக்கு அரசிடம் வாழ் வாதார உதவிகளைப் பெற்று தாருங்கள் என மூன்று விதவைப் பெண்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தனர். மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினர் நேற்று ஊர்காவற்றுறை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் ஊர்காவற்றுறை அந்தோனியார் ஆலயத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது சாட்சியமளித்த நெடுந்தீவைச் சேர்ந்த கணேசநாயகம் கருணைமலர், கிளிநொச்சியில் வசித்த நான் யுத்தம் காரணமாக பல்வேறு இடங் களில் இடம்பெயர்ந்து இறுதியாக புதுமாத்தளனில் குடியிருந்தேன். 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யுத்தம் உக்கிரமடைந்த காலப் பகுதியில் எனது கணவர் செல் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் நானும் மூன்று பிள்ளைகளும் தற்போது எதுவித உதவியுமின்றி பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் வாழ்கின்றோம். எனவே எனது குடும்பத்திற்கு அரசாங்கத்திடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஆணைக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
இதன்போது சாட்சியமளித்த நெடுந்தீவைச் சேர்ந்த குகதாஸன் சாந்தினிதேவி,வன்னி இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரத்திலிருந்தபோது எனது கணவர் செல் வீச்சில் உயிரிழந்தார். இதனால் நான் தனிமையில் எதுவித வாழ்வாதாரமுமின்றி நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டார். இவ் விசாரணையின்போது நெடுந்தீவைச் சேர்ந்த தயாபரன் சிவாஜினி சாட்சியமளிக்கையில், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி புது மாத்தளனில் நடத்தப்பட்ட செல் தாக்குதலில் எனது கணவர் உயிரிழந்தார். தற்போது ஒரு ஆண் குழந்தையுடன் எதுவித வாழ்வாதாரமுமின்றி இருக்கிறேன். எனவே அரசாங் கத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இவர்களது கேரிக்கைகளுக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், உங்களுடைய பிரச்சினைகள் போன்று பலரின் சாட்சியங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டங்களைஅரசு வழங்கவேண்டும் என்ற சிபார்சினை ஜனாதிபதியிடம் வழங்குவோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.