பக்கங்கள்

28 நவம்பர் 2010

தமிழக இளைஞர்களை ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு அனுப்புவோம்!

சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.
பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது. முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.
ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குதான் மக்களை மாற்றுகின்றனர். தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?
ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன். தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.
காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.
பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.