தமிழீழ விடுதலைப்புலிகளால் கொண்டாடப்படும் மாவீரர் தின நிகழ்வை கொண்டாடுவதற்கு அனைத்து மக்களையும் தயாராக இருக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இனந்தெரியாத சில நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன.
இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. விடுதலைப் புலிகளால் மாவீரர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ராணுவ நெருக்குவாரங்கள் காரணமாக குடாநாடு உள்ளிட்ட பகுதிகளில் அவை அமைதியாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.